சென்னையில் தற்போது 14.2 கிலோ எடையுள்ள வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.398 ஆகும். இதன் விலை மேலும் ரூ.3.50 உயருகிறது. கியாஸ் சிலிண்டர் விற்பனையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கான கமிஷன் தொகையை 9 சதவீதம் அதாவது 3 ரூபாய் 46 காசுகள் அதிகரிக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.
தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும்பொருட்டு இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வுப்பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகை 40 ரூபாய் 71 காசுகளாக உயருகிறது. இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல 5 கிலோ கியாஸ் சிலிண்டருக்கான விற்பனையாளர் கமிஷனும் ஒரு ரூபாய் 73 காசுகள் உயர்த்திக்கொள்ள பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வுப்பிரிவு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்களுக்கு ரூ.20.36 (ஒரு சிலிண்டருக்கு) கிடைக்கும். எனவே 5 கிலோ கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலையும் ரூ.1.73 உயருகிறது.
விற்பனையாளர்களுக்கான கமிஷன் அதிகரிப்பு கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாற்றப்பட்டது. அப்போது ஒரு சிலிண்டருக்கான கமிஷன் ரூ.25.83–ல் இருந்து ரூ.37.25 ஆகவும் 5 கிலோ கியாஸ் சிலிண்டருக்கான கமிஷன் ரூ.13.30–ல் இருந்து ரூ.18.63 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment