புதுடெல்லி, அக்.8-
டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் ஷர்மா தலைமையில் கைப்பற்றிய 2-வது கோப்பை இதுவாகும். கடந்த மே 6-ந் தேதி ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது.
சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நவீன கிரிக்கெட்டில் அணியில் தொடர்ந்து இடத்தை தக்கவைப்பது முடியாத விஷயம். டெஸ்ட் போட்டியில் அறிமுகம் காண நான் காத்து இருக்கிறேன். அந்த வாய்ப்பு விரைவில் கிட்டும் என்று நம்புகிறேன். சரியான நேரம் மற்றும் வாய்ப்புக்காக நான் காத்து இருக்கிறேன்.
சாம்பியன்ஸ் லீக் வெற்றி எங்களுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. எங்கள் அணி மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட அதிகப்படியான நெருக்கடியை நாங்கள் நல்ல முறையில் கையாண்டோம் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் நிறைய சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம்.
ஹர்பஜன்சிங் சிறந்த மேட்ச் வின்னர். அவரது பார்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் அருமையாக செயல்பட்டு ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக திருப்பினார். அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒன்று, இரண்டு ஓவர்களின் அடிப்படையில் போட்டியின் முடிவு அமைந்ததாக நான் நினைக்கவில்லை.
கேப்டன் சிறப்பாக விளையாடினால் அணியினரை ஈர்க்க முடியும். கேப்டன் டோனியை போல் நான் பொறுப்புடன் அணியை வழிநடத்தியதாக நம்புகிறேன். அணியின் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பையும், ஆதரவையும் அளித்தனர். 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் தெண்டுல்கருக்கு இது சரியான வழியனுப்பு விழா என்று நான் நினைக்கிறேன். தெண்டுல்கருக்காக கோப்பையை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே ஆண்டில் இரண்டு கோப்பையை வென்றது பூரிப்பாக இருக்கிறது.
இவ்வாறு ரோகித்ஷர்மா கூறினார்.
26 வயதான ரோகித்ஷர்மா இதுவரை 102 ஒருநாள் போட்டி மற்றும் 35 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருந்தாலும் இன்னும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகவில்லை.
No comments:
Post a Comment